தரிசனம் எப்போது ?
மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டு ஓடிட
இன்பத்தில் நாம்
கைகொட்டி ஆர்ப்பரிக்க
எம்மோடு கைகோர்த்து
முகம் மலர்ந்தவன் நீ !
விழிகளில் நீர் திரையிட
வாழ்வே அர்த்தமற்று
விளங்கும் அவ்வேளைதனிலே
மண்ணில் விழும் கண்ணீரின்
முறையீடுகளை பொறுமையாய்
செவிமடுப்பவன் நீ !
தெரியாமல் நாம் இழைத்த
தவறுதனைப் பொறுத்தருளி
திருந்தும் வாய்ப்பளித்து
என்றுமே எம்மை நல்வழிப்படுத்தியவன் நீ !
தெரிந்தே செய்த தவறுதனை
உணர்ந்து
மன்னிப்புக் கோரியபோது
நிந்தன் புன்சிரிப்பினையே
பதிலாகத் தந்தருளியவன் நீ !
உன்னிடம் என் காரியம்
ஆகவேண்டுமெனில்
உன்னைக் குளிர்விக்கும் வழியறிந்து
அதை அமுலாக்கிய போது
கோபித்துக் கொள்ளாதவன் நீ !
கற்றவை மனதில் பதியாமல்
மற்றவையும் விளங்கிடாமல் போகவே
செய்வதறியாது விழித்து
உன்னைத் திட்டிய போது
அவற்றை அன்புடனே
ஏற்றுக்கொண்டவன் நீ !
வாழ்வுதனில் போராடிக் களைத்து
உன்னை நம்புவதற்கில்லையென
மனம் அரற்றிய பக்தர்களுக்கு
அன்பு மார்க்கம் காட்டி
வாழ்வாங்கு வாழ்ந்திட
வழிசமைத்தவன் நீ !
பிறப்பும் இறப்பும்
உந்தன் படைப்பினிலே
பொய்த்துப் போகவே, இடையே
மனிதன் தாம் வாழ்ந்திட்ட வாழ்வுதனை
அர்த்தமுள்ளதாக்குபவன் நீ !
இத்தனையுமாய் இருந்திட்ட
உன்னை, என்றும் மறவேன் - இறைவா
மழலை தன் பாவைதனை
யாரிடமும் கொடாமல் தன்னிடமே
வைத்துக்கொள்வதைப் போல
நானும் என் இதய அறையில்
பத்திரப்படுத்துகின்றேன்
உன் நினைவின் பெருமிதங்களை !
எனினும் நெஞ்சின் ஓரத்தில்
ஒர் சிறுதவிப்பு .....
சிலையாக இருந்து சிந்தனைகளை
சீர்திருத்தும் நீ,
நிஜங்களின் நாயகனாக
தரிசனம் தருவது எப்போது ?
2 comments:
வெளிப்படையாய் தோன்றாமலே எல்லாம் செய்யும் இறைவன் போல வெளியிட்டு கூறாமலே இறைவனை தாயாய் தந்தையாய் குருவாய் நண்பனாய் உவமித்த விதம் அழகு....
தங்களின் பின்னூட்டல் என் அடுத்தடுத்த இடுகைகளுக்கு மேலும் ஊக்கம் தருவதாய் உள்ளது !
நன்றி Thinks Why Not-Wonders How :)
Post a Comment