RSS

தொடுவானம் தொலைதூரமில்லை



ஆர்ப்பரிக்கும் கடல்
சொட்டுநீலமாய் வானம்
செங்கொழுந்தாய் கதிரவன்
என் சிந்தை மயங்க
இவை மட்டுமே போதுமாயின


கடற்கரை மணல்தனில்
கால்புதைய நடந்தேன்
தொடுவானில் அவை மூன்றும்
தழுவிக் கொள்ளும்
அழகை ரசித்தபடி


இத்தனை ஜாலம் காட்டும்
தொடுவானம்
சொல்லொண்ணாத் தூரத்தில்
இருப்பது தான்
ஏக்கத்திற்குரிய விடயம்


எண்ணங்களின் இடையே
கரையோரமாய்
மணல்வீடு கட்டிய சிறுவன்
மீது ஏனோ
என் மனம் லயித்தது


மணல் அணைத்து
சிறுவீடு எழுப்பி
அதற்கோர் நடைபாதையும்
அமைத்திருந்தான்
இளையவன்


எண்ணம் நிறைவேறியதில்
புளகாங்கிதம் அடைந்திருந்தவன்
எதிரே தோன்றிய
அலையின் வருகைதனை
சற்றும் எதிர்பார்த்தானில்லை


அலையோடு அலையாய்
அவன் ஆசை வீடும்
கடலின் பசிக்கு
இரையாகிப் போனதுதான்
தாளாத வேதனை


மறுபடியும் முயற்சித்தவனுக்கு
தோல்விகளே
தொடர் கதையாகிப் போய்விட
கழிவிரக்கத்துடன் அவனை
பார்த்தபடி நின்றிருந்தேன்


முன்பு மணல்வீடு
கட்டி அழகுபார்த்தவன்
தன் வியூகம் மாற்றி
இம்முறை எழுப்பியதோ
ஓர் கற்கோட்டை


மணலை வெற்றிகொண்ட
அலையரசனுக்கு
கற்கோட்டைதனை
அசைத்துப் பார்க்க
சக்தியில்லை


வாகை சூடிவிட்ட
பெருமிதத்துடன் சிறியவன்
என்னை நோக்க
பெரியவளாய்,என் முகத்திலும்
புன்சிரிப்பொன்று மலர்ந்தது


என்னை அறியாமலேயே
அக் கணத்தில் என் விழிகள்
வானை வெறித்த போது
என்னுள்ளே உணர்ந்தேன்
‘தொடுவானம்’தொலைதூரமில்லை என !

வேர்கள் கதை பேசும்




பள்ளி செல்கையில்
உனைப் பார்த்த ஞாபகம்
சாலையோர
வளாகத்தில் கிளைபரப்பி
கம்பீரமாய் நின்றிருந்தாய்


சிறு விதைதனை
கருவாய் கொண்டு
பல வருட
உழைப்பினிலே
செழித்து தளைத்திருந்தாய்


இயற்கையை நேசித்து
உனை விதைத்த
அந்த முகந்தெரியா நபருக்கு
இருகரம் கூப்பி
நன்றியுரைத்திடவே விரும்புகின்றேன்


செயற்கைத்தனம் குடியேறிவிட்ட
குடியிருப்புகளில்
சிறகடித்துப் பறக்கும்
பல வண்ணப் பட்சிகளுக்கும்
நீ தான் அடைக்கலம்


பொருள் ஈட்டும்
பரபரப்பிலும் கூட
சில நாழிகைகளை, உன்
நிழலில் சுகமாய் கழித்திடுவோரை
நான் பார்த்ததுண்டு


பள்ளிவிட்டு வரும் பொடிசுகள்
கல் கொண்டு வீழ்த்தும்
உன் கனிகள்
இதமாய் பசியாற்றும்
சுவை மிகு அமுதங்கள்


பிடித்தவர்கள் பெயர்தனை
உன் தண்டில்
பதித்திடும் இளமையை
கிராமத்தில் மட்டுமல்ல
நகரத்திலும் காண்கின்றேன்


என் சாலையோர
நண்பனாகிவிட்ட நீ,
காலம் போன போக்கில்
அடிபட்டுப் போனதுதான்
என் துரதிஷ்டம்


ஆம், ஊரெங்கும் வியாபித்த
மனிதனின் நாகரிகப்
படைப்புகள்
இயற்கையினை பட்டும்படாமல்
தோற்கடித்தன


இயற்கை மரித்துப் போய்
செயற்கை காலூன்றிவிட
உன் போன்ற விருட்சங்களின்
ஆயுள்
குறுகித்தான் போனது


சொகுசு வாழ்க்கை
பழகிவிட்ட மானிடர்க்கு
இயற்கை வரமாய்
வேரூன்றிவிட்ட நீ
இனியும் தேவைப்படவில்லை


வானளாவி நின்ற
உன்னை
அவர்கள் வெட்டிச் சாய்த்தபோது
உன் சகாப்தம்
முடிந்ததென்றே எண்ணினர்


ஆனாலும்
அழியாச் சுவடுகளாய்
ஆழப் பதிந்துவிட்ட
உன் வேர்கள்
என்றும் உன் கதை பேசும் !

தரிசனம் எப்போது ?



மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டு ஓடிட
இன்பத்தில் நாம்
கைகொட்டி ஆர்ப்பரிக்க
எம்மோடு கைகோர்த்து
முகம் மலர்ந்தவன் நீ !


விழிகளில் நீர் திரையிட
வாழ்வே அர்த்தமற்று
விளங்கும் அவ்வேளைதனிலே
மண்ணில் விழும் கண்ணீரின்
முறையீடுகளை பொறுமையாய்
செவிமடுப்பவன் நீ !


தெரியாமல் நாம் இழைத்த
தவறுதனைப் பொறுத்தருளி
திருந்தும் வாய்ப்பளித்து
என்றுமே எம்மை நல்வழிப்படுத்தியவன் நீ !


தெரிந்தே செய்த தவறுதனை
உணர்ந்து
மன்னிப்புக் கோரியபோது
நிந்தன் புன்சிரிப்பினையே
பதிலாகத் தந்தருளியவன் நீ !


உன்னிடம் என் காரியம்
ஆகவேண்டுமெனில்
உன்னைக் குளிர்விக்கும் வழியறிந்து
அதை அமுலாக்கிய போது
கோபித்துக் கொள்ளாதவன் நீ !


கற்றவை மனதில் பதியாமல்
மற்றவையும் விளங்கிடாமல் போகவே
செய்வதறியாது விழித்து
உன்னைத் திட்டிய போது
அவற்றை அன்புடனே
ஏற்றுக்கொண்டவன் நீ !


வாழ்வுதனில் போராடிக் களைத்து
உன்னை நம்புவதற்கில்லையென
மனம் அரற்றிய பக்தர்களுக்கு
அன்பு மார்க்கம் காட்டி
வாழ்வாங்கு வாழ்ந்திட
வழிசமைத்தவன் நீ !


பிறப்பும் இறப்பும்
உந்தன் படைப்பினிலே
பொய்த்துப் போகவே, இடையே
மனிதன் தாம் வாழ்ந்திட்ட வாழ்வுதனை
அர்த்தமுள்ளதாக்குபவன் நீ !


இத்தனையுமாய் இருந்திட்ட
உன்னை, என்றும் மறவேன் - இறைவா
மழலை தன் பாவைதனை
யாரிடமும் கொடாமல் தன்னிடமே
வைத்துக்கொள்வதைப் போல
நானும் என் இதய அறையில்
பத்திரப்படுத்துகின்றேன்
உன் நினைவின் பெருமிதங்களை !


எனினும் நெஞ்சின் ஓரத்தில்
ஒர் சிறுதவிப்பு .....
சிலையாக இருந்து சிந்தனைகளை
சீர்திருத்தும் நீ,
நிஜங்களின் நாயகனாக
தரிசனம் தருவது எப்போது ?

நாட்கள் நகர்கின்றன ...

உயர்கல்வி பெறுவதற்காய்
போட்டிப் பரீட்சை
எழுதிக் களைத்திருந்த
அந்த இனிய நாட்கள்......


சுபநேரம் பார்ப்பவர்கள்
மத்தியில்
விழிப்பதற்கும் நேரம்
பார்த்திட்ட நாட்கள்


வித்திட்டு வளர்த்த
பள்ளிதனை
மீண்டும் மீண்டும்
நலம் விசாரித்த நாட்கள்


வாழ்வின் நெருங்கிய
அங்கமாகிவிட்ட சகாக்கள் சகிதம்
வெட்டிப் பேச்சு
பேசிய நாட்கள்


இன்பம் மட்டுமே
தென்றலாய் வீசும் மனையில்
உற்சாகமாய்
வளைய வந்த நாட்கள்


அரங்கமே அதிர்ந்திட
அபிமான நட்சத்திரத்தின்
திரைப்படம்தனை கைதட்டி
சிலாகித்த நாட்கள்


பார்த்தறிந்த இடம்தனில்
சுற்றித் திரிந்த போது
முடிசூடா மன்னனாய்
உவகை கொண்ட நாட்கள் ........


மன்றாடிக் கேட்பினும்
காலம் தன் ஓட்டத்தை
எனக்காக
நிறுத்தத் தயாரில்லை


நாட்கள் நகர்ந்தன
வெற்றிகளும் கிடைத்தன
வெற்றிகளின் பலனாய்
மேற்கண்ட இன்பங்களும் பறிபோயின


உயர்கல்வி கற்றிடவே
சொந்தம் ந்ட்பு துறந்து
இனந்தெரியா மனிதரிடையே
வாழ வேண்டிய கட்டாயம்


அன்று இன்பமாய்
கழிந்த நாட்கள் - இன்று
நாட்காட்டி பார்த்தே ஏக்கத்துடன்
கழிந்து போகின்றன


ஆம், என் ஒட்டுமொத்த
இன்பத்திற்குமாய்
காலம் இட்ட
கடிவாளம் -
என் விடுதி வாழ்க்கை !

வாழ்க்கை




வாழ்க்கை என்பது
என்னைக் கேட்டால்
நிச்சயமாய்
ஒரு போராட்டம்


கருவறை இருள் கிழித்து
உலகைக் காணத்துடிக்கும்
குழந்தைக்கும்
அது ஒரு போராட்டம்


உலகுதனைக் கண்டுவிட்டால்
தீது நன்மை தெளிந்து
வாழ்ந்திடுவோம் என்ற
அபிலாஷையும் ஒரு போராட்டம்


திரைகடல் ஓடி
திரவியம் தேடிடவே
உளைத்துக் களைக்கும்
மானிடமும் ஒரு போராட்டம்


போராட்டம் தான்
வாழ்க்கையெனில்
போராடிடப் படைத்தவன்
இருக்கத்தான் செய்கின்றானா ?