
ஆர்ப்பரிக்கும் கடல்
சொட்டுநீலமாய் வானம்
செங்கொழுந்தாய் கதிரவன்
என் சிந்தை மயங்க
இவை மட்டுமே போதுமாயின
கடற்கரை மணல்தனில்
கால்புதைய நடந்தேன்
தொடுவானில் அவை மூன்றும்
தழுவிக் கொள்ளும்
அழகை ரசித்தபடி
இத்தனை ஜாலம் காட்டும்
தொடுவானம்
சொல்லொண்ணாத் தூரத்தில்
இருப்பது தான்
ஏக்கத்திற்குரிய விடயம்
எண்ணங்களின் இடையே
கரையோரமாய்
மணல்வீடு கட்டிய சிறுவன்
மீது ஏனோ
என் மனம் லயித்தது
மணல் அணைத்து
சிறுவீடு எழுப்பி
அதற்கோர் நடைபாதையும்
அமைத்திருந்தான்
இளையவன்
எண்ணம் நிறைவேறியதில்
புளகாங்கிதம் அடைந்திருந்தவன்
எதிரே தோன்றிய
அலையின் வருகைதனை
சற்றும் எதிர்பார்த்தானில்லை
அலையோடு அலையாய்
அவன் ஆசை வீடும்
கடலின் பசிக்கு
இரையாகிப் போனதுதான்
தாளாத வேதனை
மறுபடியும் முயற்சித்தவனுக்கு
தோல்விகளே
தொடர் கதையாகிப் போய்விட
கழிவிரக்கத்துடன் அவனை
பார்த்தபடி நின்றிருந்தேன்
முன்பு மணல்வீடு
கட்டி அழகுபார்த்தவன்
தன் வியூகம் மாற்றி
இம்முறை எழுப்பியதோ
ஓர் கற்கோட்டை
மணலை வெற்றிகொண்ட
அலையரசனுக்கு
கற்கோட்டைதனை
அசைத்துப் பார்க்க
சக்தியில்லை
வாகை சூடிவிட்ட
பெருமிதத்துடன் சிறியவன்
என்னை நோக்க
பெரியவளாய்,என் முகத்திலும்
புன்சிரிப்பொன்று மலர்ந்தது
என்னை அறியாமலேயே
அக் கணத்தில் என் விழிகள்
வானை வெறித்த போது
என்னுள்ளே உணர்ந்தேன்
‘தொடுவானம்’தொலைதூரமில்லை என !