RSS

என்றேனும் ஓர்நாள்




விபரங்கள் அறியாமல்
விளைவுகள் புரியாமல்
சிறுபிள்ளைத்தனமாய்
அன்று நான் உரைத்த
பொய்கள்
இன்றுவரை என் நிழலாய்
என்னோடு நிழலாடுகின்றன


மனித வாழ்வினில்
நீக்கமற கலந்துவிட்ட
இப் பொய்கள்
என்னால் மட்டும்
ஜீரணிக்க முடியாமல் போனது
என் துர்பாக்கியமே !


கல்லைத் தின்று
தண்ணீர் குடித்த கதையாய்
உன் பால்முகம் நோக்கி
அன்று பொய் உரைத்ததற்காய்
இன்று வருந்துகின்றேன்


மனம் தெளிந்து இனியேனும்
நிஜத்தோடு நிஜமாய்
என் வாழ்வை
அமைத்திடவே விரும்புகின்றேன் - இருப்பினும்
இப்பூமிதனில்
வேண்டியது கிடைப்பதில்லை
விரும்பியது நடப்பதில்லை
என் பொய்களும் மறைவதற்கில்லை


இதழிலிருந்து வெளிவந்த
வார்த்தைகள்
தவமிருந்து வேண்டினும்
அழிவதற்கில்லை
என்றேனும் ஓர்நாள்
என் பொய்களிலிருந்து - எனக்கு
விடுதலை கிடைக்குமானால் ...

என்றும் நட்புடன்



உன்னிடம் ஓராயிரம் கதைகள் பேசியிருப்பேன்
அவற்றில் அர்த்தமுள்ளவை எத்தனையென
இன்னும் தெரியவில்லை
உனைக்கேலி செய்து சிரித்திருப்பேன்
அவை உனைப் பாதித்ததா
என புரியவில்லை


நீ நகைப்பதற்காய் கவி பாடியிருப்பேன்
அதை ரசித்தாயோ என்னவோ
நான் அறியவில்லை
என் கவலைகளை உன்னிடம் பகிர்ந்திருப்பேன்
எனை சுமையாய் எண்ணினாயோ
அன்று நான் சிந்திக்கவில்லை


இன்முகம் காட்டும் உன்னிடம்
என் கோபம் காட்டியிருப்பேன்
அன்றென்னை வெறுத்தாயோ நண்பனே
நான் அறியவில்லை
இருப்பினும் - என்றும்
என்னுடன் நட்பு பாராட்டும் உன்னை
பிரியேன் எனமட்டும் நான் அறிவேன் !

நாகரிகக் கோழைகள்




பேரூந்தில் பயணிக்கையில்
மறவாமல் பயணச்சீட்டு
எழுதித் தந்தவன் - என்
மீதிச் சில்லறையை மட்டும்
தந்தானில்லை


கண்ணியம் காப்பதாய்
எண்ணி
நான் இழந்த சில்லறைகளில்
இற்றைக்கு ஓர்
கைக்குட்டையேனும் வாங்கியிருப்பேன்


நினைத்ததை உரைத்திடவே
துடிக்கின்றேன்
எனக்கேயுரிய என்னுரிமைகளை
கேட்டுப் பெற்றிடவே
விரும்புகின்றேன்


உதடுவரை வந்திட்ட
வார்த்தைகள்
வெளிவராமலேயே
மடிந்து போகும் போது
வெட்கித்தான் போகின்றேன்


கொடுத்த பணத்திற்கு
மிகுதிதனைக் கேட்டுப் பெறாமல்
என் போல்
பயணிப்போரின் எண்ணிக்கையினை
இன்றுவரை அறியேன்


நாகரிகம் என்னும்
அரிதாரம் பூசியபடி
ஓரிரு சில்லறைகளுக்காய்
தினம் தினம் வாய்திறந்திட
இன்றுவரை தயங்குகின்றேன்


தற்பெருமை காத்திடும்
முதுகெலும்பில்லா ஓர்
நாகரிகக் கோழையாய்
அதே பேரூந்தினில்
நாளையும் பயணிப்பேன் ...