RSS

நாகரிகக் கோழைகள்




பேரூந்தில் பயணிக்கையில்
மறவாமல் பயணச்சீட்டு
எழுதித் தந்தவன் - என்
மீதிச் சில்லறையை மட்டும்
தந்தானில்லை


கண்ணியம் காப்பதாய்
எண்ணி
நான் இழந்த சில்லறைகளில்
இற்றைக்கு ஓர்
கைக்குட்டையேனும் வாங்கியிருப்பேன்


நினைத்ததை உரைத்திடவே
துடிக்கின்றேன்
எனக்கேயுரிய என்னுரிமைகளை
கேட்டுப் பெற்றிடவே
விரும்புகின்றேன்


உதடுவரை வந்திட்ட
வார்த்தைகள்
வெளிவராமலேயே
மடிந்து போகும் போது
வெட்கித்தான் போகின்றேன்


கொடுத்த பணத்திற்கு
மிகுதிதனைக் கேட்டுப் பெறாமல்
என் போல்
பயணிப்போரின் எண்ணிக்கையினை
இன்றுவரை அறியேன்


நாகரிகம் என்னும்
அரிதாரம் பூசியபடி
ஓரிரு சில்லறைகளுக்காய்
தினம் தினம் வாய்திறந்திட
இன்றுவரை தயங்குகின்றேன்


தற்பெருமை காத்திடும்
முதுகெலும்பில்லா ஓர்
நாகரிகக் கோழையாய்
அதே பேரூந்தினில்
நாளையும் பயணிப்பேன் ...